ரயில்வே வேலை மோசடி விவகாரம் ரப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை

பாட்னா: ரயில்வேயில் வேலை வழங்க, நிலத்தை குறைந்த விலைக்கு லஞ்சமாக வாங்கிய வழக்கில் லாலு மனைவி ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் விசாரணை மேற்கொண்டனர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, பீகாரை சேர்ந்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தர அவர்களின் நிலத்தை குறைந்த விலைக்கு லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து, லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் லாலு குடும்பத்தினர் வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பீகாரின் பாட்னாவில் உள்ள ரப்ரி தேவி வீட்டிற்கு நேற்று சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் ரெய்டு மற்றும் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை சேகரிப்பதற்காக ரப்ரி தேவியிடம் சிபிஐ விசாரித்ததாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரப்ரி தேவி வீட்டின் முன்பாக ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜவை எதிர்த்தால் ரெய்டுதான் நடக்கும்

சிபிஐ விசாரணை குறித்து பீகார் துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘பாஜவுடன் இருந்தால் நீங்கள் ஹரிச்சந்திரன். எதிர்த்தால் ரெய்டுதான். மகாராஷ்டிராவில் சரத்பவார் மருமகன் அஜித் பவார் பாஜவுக்கு தாவினார். அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. திரிணாமுல் காங்கிரசின் முகுல் ராய் பாஜவுக்கு சென்றார். அவர் மீதான வழக்குகளும் முற்றிலும ரத்து செய்யப்பட்டன. ஆனால், பாஜவின் முகத்திரையை கிழித்தால் சிபிஐ சோதனை தான் நடக்கும்’’ என்றார்.

Related Stories: