மருத்துவ துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கிறோம்; பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘மருத்துவ துறையில்  வெளிநாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

‘சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

சுதந்திரத்திற்குப் பிறகு, ஒருங்கிணைந்த அணுகுமுறையும், பல ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வையும் இல்லாததால், இந்தியாவின் சுகாதாரத்துறை சிதைந்து இருந்தது. ஒன்றியத்தில் பாஜ அரசு அமைந்த பிறகு இன்று மருத்துவ துறையின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே, தனியார் துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும்.

கொரோனாவால் வளர்ந்த நாடுகளே பாதித்த நிலையில், இந்த உலகமே சுகாதாரத்தின் மீது கவனம் செலுத்தியது. ஆனால் இந்தியா ஒரு படி மேலே சென்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்டியது. குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பது அரசின் முன்னுரிமை. இதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் ரூ.80,000 கோடி மருத்துவ செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மலிவு விலை மருந்தகங்கள் மூலம் அவர்களின் ரூ.20 ஆயிரம் கோடி பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

 மருத்துவ துறையில் இந்தியா எந்த தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்யாமல் தன்னிறைவு பெறுவதை நம் தொழில்முனைவோர் உறுதி செய்ய வேண்டும். மருத்துவத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை நாங்கள் தொடர்ந்து குறைக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

Related Stories: