அருந்ததியர் குறித்து அவதூறு பேச்சு நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல், பாட்டில்கள் வீசி தாக்குதல்: சென்னையில் 7 பேர் கைது

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலின் போது அருந்ததியினரை பற்றி அவதூறாக பேசியதாக, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் அக்கட்சி அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஈரோடு இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியினர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருந்ததியினர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சீமானை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னை போரூர் லட்சுமி நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஆதித்தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வளசரவாக்கம் போலீசார் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திட்டமிட்டபடி, ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி ஜக்கையன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் அருகே ஒன்று கூடினர். பின்னர் கையில் கொடியுடன், ‘ஆதித்தமிழர்களான அருந்ததியர்களை வந்தேறிகள் என்றும், துப்புரவுப்பணி செய்ய வந்தவர்கள்’ என்றும் அருந்ததியர்களை இழிவாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியபடி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது போலீசார் முற்றுகை போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், சிலர் போலீசாரின் தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு கொடியுடன் ஓடி வந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் திடீரென அருகில் கிடந்த கற்கள் மற்றும் பாட்டில்களை எடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

உடனே, அலுவலகத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியின் ெதாண்டர்கள் தாக்குதல் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினர் மீது பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட தகவலால், அக்கட்சியின் தொண்டர்கள் அப்பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை ஓட ஓட விரட்டி அடித்தனர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, முற்றுகை போராட்டம் நடந்த பகுதியில் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

7 பேர் கைது: நாம் தமிழர் கட்சி -ஆதித்தமிழர் அருந்ததியினர் கட்சி இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஆதித்தமிழர் கட்சியினர் 20 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 15 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: