கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் 2.21லட்சம் புறநோயாளிகள் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்ட ஓராண்டில் 2.21லட்சம் புறநோயாளிகள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர், கடந்தாண்டு கிண்டி கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடியில் கட்டிடம் மற்றும் ரூ.146.52 கோடியில் அதிநவீன உபகரண வசதியுடன் 6 லட்சம் சதுர அடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். அங்கு, இருதயவியல் மருத்துவ துறை, இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை துறை. நரம்பியல் மருத்துவ துறை, புற்று நோய் அறுவை சிகிச்சை பிரிவு, இரைப்பை குடல் நோய் மருத்துவம், இரைப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சை, நுண்துளை மூளை ரத்தநாள கதிரியல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு மருத்துவ பிரிவுகளாக அவசர சிகிச்சை, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மைய ஆய்வகம், ரத்த வங்கி, கதிரியிக்கவியர் பிரிவு, இயன் முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் உள்ளன. தற்போது இந்த மருத்துவமனை ஓராண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது. ஓராண்டு முடிவில் புறநோயாளிகள் 2,21,434, உள்நோயாளர்கள் 63,505 பயனடைந்துள்ளனர். இதுவரை நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் 2,179, ஆஞ்கியோகிராம் 521, டயாலிசிஸ் 6,968, ஆய்வக பரிசோதனைகள் 7,72,558, சிடி.ஸ்கேன் 7,247, எண்டோஸ்கோப்பி 2,004, எக்ஸ்ரே 10,168, எக்கோ பரிசோதனைகள் 17,349 என்கின்ற எண்ணிக்கையில் பயன்பெற்றுள்ளனர். மேலும் சிறப்பம்சமாக முதல்வர் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 70 தனி அறைகள் பயன்பாட்டில் உள்ளன.

சிறப்பம்சமாக இதய அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் இதய நுரையீரல் இயந்திரம், துல்லியமான மூளை நரம்பியல், புற்றுநோய் மற்றும் கல்லீரல் சிகிச்சை செய்ய பயன்படும் யூசா எனப்படும் இயந்திரம், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்யேகமான 3டி செயல்படும் நுண்ணோக்கி மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் எச்ஐபிஇசி உபகரணம் கொண்டு உயர்தர நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இந்த எச்ஐபிஇசி அதிநவீன அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் செலவில் செய்யப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் 2.21லட்சம் புறநோயாளிகள் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: