மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு மாற்று இடம்: அதிகாரிகள் ஏற்பாடு

சென்னை: அடையாறு ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் 9500 குடும்பங்களில் 5000 குடும்பங்கள் மாற்று இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மழைக்காலம் வந்தாலே சாலைகள் வெள்ளத்தில் மூழ்குவதும், வீடுகளுக்குள் மழைநீர் தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு சென்னையின் முக்கிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதே காரணம். அடையாறு ஆற்றின் வழியே தான் சென்னையில் பெய்யும் மழைநீர் கடலில் கலக்க முடியும். ஆனால் தற்போது இந்த ஆற்றங்கரையின் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் மழை பெய்யும் போது வெள்ள நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அடையாறு ஆற்றை மறுசீரமைப்பு செய்து கரையோரங்களில் வசிக்கும் குடியிருப்புகள் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றம் செய்து, அவர்களுக்கு உரிய வாழ்விட வசதிகளை ஏற்படுத்தி தரும் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அடையாறு ஆற்றங்கரை பகுதியில் 9500 குடும்பங்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடையாறு நதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் 5,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பல குடும்பங்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள 10 வாழ்விட குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 4500 குடும்பங்கள் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்களை இடமாற்றம் செய்யும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரண நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 வாழ்வாதார உதவித் தொகையாகவும், மாதம் ரூ.2500 வீதம் ஆண்டுக்கு ரூ.30,000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மக்களுக்கு பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு தங்க வைக்கப்படும் குடும்பத்தினருக்கு போதிய தன்னம்பிக்கையும், உறுதியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு மாற்று இடம்: அதிகாரிகள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: