செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: சார்பதிவாளர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த, ஆவடி சார்பதிவாளர் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆவடியில் நான் கிரையம் வாங்கிய பாகம் பிரிக்கப்படாத நிலத்தை, எனது கணவர் நாராயணன் பெயருக்கு செட்டில்மென்ட் வழங்குவதற்காக ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்தேன். அப்போது சில காரணங்களை கூறி பத்திரவுப்பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்துவிட்டார். எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அண்ணாமலை ஆஜராகி, ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய பிறகும், பத்திரத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்து விட்டார், என்று வாதிட்டார். அப்போது, பதிவாளர் சார்பில் வாதிட்ட அரசு வழக்கறிஞர், பதிவாளருக்கு உரிய அறிவுறுத்தல் தரப்படும். மனுதாரர் தனது ஆவணங்களை சார்பதிவாளரிடம் கொடுத்தால் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, சார்பதிவாளரிடம் மனுதாரர் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்று பத்திரப்பதிவு குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவடி சார்பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: சார்பதிவாளர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: