நடந்து முடிந்த தேர்தலே சாட்சி; பாஜ பொய் வாக்குறுதிகளை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: டிகேஎஸ்.இளங்கோவன் பேச்சு

தண்டையார்பேட்டை: பாஜவின் பொய் வாக்குறுதிகளை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அதற்கு நடந்து முடிந்த தேர்தலே சாட்சி என்று திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 38வது வட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளரும், சென்னை மாநகராட்சி 4வது மண்டலக்குழு தலைவருமான நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். ஆர்.கே. நகர் மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு தையல் இயந்திரங்கள், இட்லி குக்கர், நான்ஸ்டிக் தவா ஆகிய பொருட்களை 1000 பேருக்கு வழங்கினார். அதை தொடர்ந்து அவர் பேசியதாவது: கலைஞர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, குடிசை வீடுகளை அகற்றி குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்து அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுத்தார். திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். இப்படி பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளார். அதனால்தான் இன்றுவரை அவருடைய புகழ் நிலைக்கிறது. 19 ஆண்டு காலம் கலைஞர் தமிழக முதல்வராக இருந்துள்ளார். 70 ஆண்டுகளாக அவர் பெரியார், அண்ணா கொள்கைக்காக பாடுபட்டவர்.

மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நமது கூட்டணி கட்சி 40க்கு 40 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. மத்தியில் ஆளும் பாஜ அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறி வந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் பாஜவிற்கு நல்ல பாடம் புகட்டி உள்ளனர். பாஜவின் பொய்யான வாக்குறுதிகளை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதற்கு இந்த தேர்தலின் முடிவே அதற்கு சான்று. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், மாவட்ட துணைச் செயலாளர் நாகம்மை கருப்பையா, கிருஷ்ணன், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

The post நடந்து முடிந்த தேர்தலே சாட்சி; பாஜ பொய் வாக்குறுதிகளை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: டிகேஎஸ்.இளங்கோவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: