‘அண்ணாமலை ஆலோசனை தேவை இல்லை’ ஈரோடு தேர்தலில் பாஜவால் அதிமுக வாக்கு வங்கி சரிவு: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்

கொடைக்கானல்: ‘‘பாஜ கூட்டணியால்தான்  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது’’ என மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கொடைக்கானலில் நேற்று அளித்த பேட்டி: ஓபிஎஸ்க்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. ஆற்றாமை காரணமாக அவர் பேசுகிறார். அவருக்கு அங்கீகாரம் கிடையாது. கட்சியிலும் இல்லை. ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்ற அவருடைய கருத்தை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, அந்த காலத்தில் இருந்தே அதிமுக சேர்ந்து இருக்க  வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.

இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்ல  வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு இல்லை. எங்களுடைய கட்சிக்கு எது சரி என்று  தெரியும். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜ கூட்டணி இருந்ததால், அதிமுக வாக்கு வங்கி  பாதிக்கப்பட்டது உண்மை. இடத்தையும் சூழலையும் பொறுத்து வாக்கு வங்கி  குறைகிறது. பாஜவால் அதிமுகவிற்கு பெரிய ஆதாயம் இல்லை; இழப்பும் இல்லை. எடப்பாடி பழனிசாமி சிந்தித்து அவரே முடிவு எடுப்பார்.  

அண்ணாமலையின் ஆலோசனையை கேட்டு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  அண்ணாமலை அவருடைய கட்சியை வளர்க்க வேலை பார்க்கட்டும். அதிமுகவை  உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதிமுகவிற்கும், பாஜவிற்கும் கொள்கை, கருத்து  முரண்பாடு உள்ளது. கூட்டணி என்பதற்காக அனைத்தையும் ஏற்க முடியாது. கூட்டணி என்பது  இன்றைக்கு இருக்கும்; நாளைக்கு இருக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: