பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொகை: மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வாக்குறுதி

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். மத்தியபிரசேத மாநிலத்தில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து சிவ்ராஜ் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பூசலை பயன்படுத்தி கமல்நாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜ ஆட்சியை பிடித்து சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

அங்கு கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்த பாஜ நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க இப்போதே காய்களை நகர்த்தி வருகிறது. இந்நிலையில், மபி சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த புதன்கிழமை (மார்ச் 1) சிவ்ராஜ் சிங் சவுகான் தாக்கல் செய்தார். இதில் பெண்களை கவரும் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வௌியிட்டார். அதன்படி, வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து, ‘ அன்பு சகோதரிகளுக்கான முதல்வரின்  திட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

இந்நிலையில், மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என கமல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், உலகில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மிகப்பெரிய திட்டத்தின்கீழ், மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அறிவிப்புகளை மட்டும் வௌியிட்டு செயல்படுத்தாத முதல்வர் சவுகான். ஆனால் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும். பெண்களை அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் உறுதிமொழியில் இருந்து காங்கிரஸ் பின்வாங்காது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: