நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசின் வரவு, செலவு தினசரி கண்காணிப்பு: நிதி அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க, கடந்த 1ம் தேதி முதல் வரி வசூல் உள்ளிட்ட வரவு, செலவு கணக்குகளை ஒன்றிய நிதி அமைச்சகம் தினமும் கண்காணிக்க தொடங்கி உள்ளது. வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக வைத்திருக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஜனவரி முடிவில், நிதி பற்றாக்குறை ரூ.11.91 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். மேலும், பங்கு விலக்கல் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், ரூ.31,106 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், இதில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க தினசரி அடிப்படையில் வரவு, செலவு கணக்கை ஒன்றிய நிதி அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிக்கும் ஒன்றிய நேரடி வரிகள் வாரியம், ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆகியவை தினசரி புள்ளிவிவரங்களை தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே, பாதுகாப்பு மற்றும் தபால் போன்ற அமைச்சகங்களும் தினசரி அடிப்படையில் கணக்குகளை இ-லேகா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரி மற்றும் வரி அல்லாத வருவாய் வசூல்களை தினசரி கண்காணிப்பது, சரியான நேரத்தில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: