திருமங்கலம் - மதுரை இடையே இரண்டாவது அகல ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு: ரயில்களின் பயண நேரம் குறைகிறது

திருமங்கலம்: திருமங்கலம் - மதுரை இடையே 17 கி.மீ தூரத்திற்கான இரண்டாவது அகல ரயில் பாதையில் நேற்று முன்தினம் இரவு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த பாதை பயன்பாட்டிற்கு வர உள்ளதால் தென்மாவட்ட ரயில்களின் பயண நேரம் குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மதுரையிலிருந்து, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடிக்கு இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. நாகர்கோவில் முதல் திருமங்கலம் வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏற்கனவே முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டமாக திருமங்கலம் - மதுரை இடையே 17 கி.மீ தூரத்திற்கான அகல ரயில் பாதை பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் மின்பாதை மற்றும் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்த, அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் புதிய அகல ரயில் பாதையில் 120 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, திருமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தினை சீரமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் காலை முதல் படுவேகமாக நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இந்த பணிகள் முடிவடைந்தது. பின்னர் இரவு 8.50 மணியளவில் மூன்று பெட்டிகள் பொருத்தப்பட்ட ரயில் திருமங்கலத்திலிருந்து மதுரை வரையில் இயக்கப்பட்டது. இதில், ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி குப்தா தலைமையில் அதிகாரிகள் சென்றனர். இந்த ரயில் 120 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மதுரை சென்றடைந்தது. தற்போது மதுரை - நாகர்கோவில் இடையே இரண்டாவது அகல ரயில் பாதை பணிகள் முழுமை பெற்றுள்ளது. விரைவில் இந்த வழியாக பயணிகள் ரயில் சேவை துவங்க உள்ளது. இதனால் தென்மாவட்டங்களிலிருந்து மதுரை வரையிலான ரயில்களின் பயண நேரம் 10 நிமிடங்கள் வரை குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: