ரூ.6.84 கோடியில் சீரமைக்கப்பட்ட திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து துவங்கியது: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி: திருச்சி- ஸ்ரீ ரங்கம் இடையிலான காவிரி பாலம் சீரமைப்பு பணிகள் முடிவுடைந்ததையடுத்து நகர்ப்புற உள்ளாட்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ரிப்பன்வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து காவிரி பாலத்தில் வழக்கம்போல் வாகனங்கள் போக்குவரத்து தொடங்கியது. திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக காவிரி பாலம் திகழ்கிறது. திருச்சி- ஸ்ரீ ரங்கத்தை இணைக்கும் வகையில் 1976ம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. பழமையான காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் அதிகரித்தது. இதை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, காவிரி பாலம் சீர்செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார். அதன்படி ரூ.6 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சீரமைப்பு பணிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் பாலம் மூடப்பட்டது. இதைதொடர்ந்து காவிரி பாலத்தில் உள்ள வாகன அதிர்வு தாங்கிகளான 192 பேரிங், தூண்களுக்கிடையே உள்ள 32 ஸ்டிரிப்ஸ்டில்கள், மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் கம்பிகள் புதிதாக மாற்றப்பட்டது. இருபுறமும் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு, டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, பாலதடுப்பு கட்டைகளில் வர்ணம் பூசும் பணி, சீரமைப்பு பணிகள் மாநில நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கேசவன், புகழேந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தலைமையில் கடந்த 6 மாதங்களாக சுறுசுறுப்பாக நடைபெற்றது.

அனைத்து பணிகளும் முடிந்ததையடுத்து, காவிரி பாலத்தை நேற்று அதிகாலை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர். காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதைதொடர்ந்து பாலத்தில் தங்கு தடையின்றி போக்குவரத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: