ஓவேலி பேரூராட்சியில் வனத்துறை முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

கூடலூர் : ஓவேலி பேரூராட்சி பசுமை நகர் பகுதியில் வனத்துறை சார்பில் யானைகளை கண்காணிக்க அமைக்கப்படும் முகாமிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகளை துவங்காமல் வனத்துறையினர் திரும்பினர்.ஓவேலி பேரூராட்சி பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளை கண்காணிக்க மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டி முகாம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி வனத்துறையினர் முடிவு செய்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில், கடந்த சில வருடமாக யானை- மனித மோதல் அதிகரித்து வருவதாலும்,  வனப்பகுதியில் வறட்சி துவங்கியுள்ளதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவாசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதால் உயிர்ப்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த மாதம் வனப்பகுதியை விட்டு காந்திநகர் மற்றும் லாரஸ்டன் நெ-4 பகுதியில் கண்காணிப்பு முகாம்கள் அமைக்க வனத்துறையினர் பணிகளை துவங்கிய போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

இது தொடர்பாக, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும்  உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பசுமை நகர் பகுதியில் முகாம் அமைக்கும் பணிகளுக்காக பொக்லைன் இயந்திரத்துடன் வந்த வனத்துறையினரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கண்காணிப்பு முகாம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. யானைகளை கண்காணிப்பதற்காக மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் முகாம் அமைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளை வனப் பகுதியாக மாற்றி அமைக்க வனத்துறை முயற்சிப்பதாக மக்கள் கருதுவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களை தனியாக பிரித்து வனப்பகுதிகளை ஒட்டி முகாம்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: