எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: லண்டனில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் நான் உட்பட பல அரசியல் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது’ என லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார கால பயணமாக இங்கிலாந்திற்கு கடந்த 1ம் தேதி சென்றார். அங்கு புகழ்பெற்ற லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘21ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் விரிவுரையாற்றினார். அப்போது ராகுல் பேசியதாவது:

இந்தியாவில் ஜனநாயகம் அழுத்தத்திற்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். அதைப் பற்றி பல செய்திகள் வந்துள்ளன. அரசியலமைப்பு, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரிக்கிறது. அந்த ஒன்றியத்திற்கு பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் வேண்டும். அந்த பேச்சுவார்த்தைதான் தற்போதும் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கிறது. இது நாடாளுமன்றத்திற்கு வெளியில் எடுத்த புகைப்படம் (திரையில் புகைப்படத்தை சுட்டிக்காட்டுகிறார்). எதிர்க்கட்சி தலைவர்கள் சில பிரச்னை பற்றி அங்கு பேசிக் கொண்டிருந்த போது திடீரென கைது செய்யப்பட்டனர்.

இது 3, 4 முறை நடந்துள்ளது. இதே போல, சிறுபான்மையினர், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் தூண்களான நாடாளுமன்றம், பத்திரிகை , நீதித்துறை உள்ளிட்டவை அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம்.இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக நான் உட்பட பல அரசியல்தலைவர்களும் வேவு பார்க்கப்பட்டுள்ளனர். ‘உங்கள் போன் ஒட்டு கேட்கப்படுகிறது. கவனமாக இருங்கள்’ என உளவுத்துறை அதிகாரிகளே என்னை எச்சரித்துள்ளனர்.

கிரிமினல் பிரிவுகளில் வராத குற்றச்சாட்டிலும் கூட என்மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீதும் ஊடகத்தின் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும் போது, ஒரு எதிர்க்கட்சியாக நாங்கள் மக்களுடன் தொடர்பு கொள்வது கடினமாகி உள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசி உள்ளார்.

* அந்நிய மண்ணில் அவமதித்துள்ளார்

ராகுல் பேச்சு குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில், ‘‘ராகுலின் பேச்சிலிருந்து பிரதமர் மீதான அவரது வெறுப்பை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் வெளிநாட்டு மண்ணில் தாய்நாட்டை இழிவுபடுத்துவது, காங்கிரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்ப வைக்கிறது. நடந்து முடிந்த 3 மாநில தேர்தலில் மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் தோல்வியடைந்தது.  அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ராகுல் மீண்டும் மீண்டும் பெகாசஸ் பற்றி பொய் பேசியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் தலைமையிலான தொழில்நுட்ப குழுவில் பெகாசஸ் தொடர்பான ஆய்வு செய்ய ராகுல் ஏன் அவரது செல்போனை தரவில்லை? நீங்கள்  எதை மறைக்க விரும்புகிறீர்கள்?’’ என்றார்.

Related Stories: