வடகிழக்கில் வலுப்பெறவில்லை மாநில கட்சிகளின் வெற்றியை சொந்தம் கொண்டாடும் பாஜ: அசாம் பிராந்திய கட்சி குற்றச்சாட்டு

கவுகாத்தி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலத்திலும் பாஜ கூட்டணி ஆட்சி அமைந்ததற்கு பிரதமர் மோடியின் கிழக்கு நோக்கிய தொலைநோக்கு பார்வையே காரணம் என பாஜ பெருமை பேசி வருகிறது. பிரதமர் மோடியின் பிரசாரத்தால் வடகிழக்கில் பாஜவின் பலம் வலுவடைந்து வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இது முற்றிலும் சரியானதல்ல என அசாமின் பிராந்திய கட்சிகளில் ஒன்றான அசாம் ஜாதிய பரிஷத்தின் பொதுச் செயலாளர் ஜகதிஷ் புயன் கூறி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: நாகலாந்து, மேகாலயா ஆகிய 2 மாநிலத்திலும் உண்மையான அரசியல் அதிகாரம் பிராந்திய கட்சிகளிடமே இருப்பதாக என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். நாகலாந்தில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜ 12ல் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி பிராந்திய கட்சி 40ல் 25 இடங்களில் வென்றுள்ளது. எனவே, உண்மையில் என்டிபிபி தான் செல்வாக்கை கொண்டுள்ளது. பாஜ அல்ல. மேகாலயாவில் தேர்தலுக்கு முன்பாக என்பிபி உடனான கூட்டணி முறிந்ததும் சங்மா ஆட்சியில் பல ஊழல் நடந்ததாக பாஜ குற்றம்சாட்டியது.

ஆனால் தனித்து போட்டியிட்ட பாஜவால் வெறும் 2 தொகுதியில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. திரிபுராவில் பாஜ கடந்த தேர்தலில் வென்ற 36 இடங்களை விட இம்முறை 4 இடம் குறைந்து 32 இடத்தில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சி 8ல் இருந்து 1 இடமாக சரிந்துள்ளது. அதே சமயம் அங்கு முதல் முறையாக போட்டியிட்ட திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தனது புகழ் மற்றும் வெற்றியைப் பற்றி திப்ரா மோத்தா அதிகளவில் பேச வைத்துள்ளது. இதனால், வடகிழக்கில் வலுவடைந்து விட்டதாக பாஜ கூறுவதற்கு மாறாக, இங்கு உண்மையான அதிகாரம் எப்போதும் போல் பிராந்திய கட்சிகளிடமே உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: