செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

செங்கம்: செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் நேற்று 93ம் ஆண்டு எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் எம்பி, எம்எல்ஏ பங்கேற்றனர். செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் எருது விடும் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 93ம் ஆண்டு கொட்டாவூர் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர்  மு.பெ.கிரி தலைமை தாங்கினார். நகர திமுக செயலாளர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாதவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி சத்யராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்  சி.என்.அண்ணாதுரை கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மேலும், எருது விடும் நிகழ்ச்சியை எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ   மு.பெ.கிரி ஆகியோர்  கொடியசைத்து  துவக்கி வைத்தனர். தொடர்ந்து, செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இதில், வெற்றி பெறும் முதல் காளைக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், போட்டியில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. முடிவில் திமுக தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் புகழ் நன்றி கூறினார்.

Related Stories: