ஒன்றிணைக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க ஒருமித்த கருத்து தேவை: ஜி20 வௌியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு துறைகளின் சார்பான தொடர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜி20 நாடுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு புதுடெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

  நேற்றைய 2ம் கட்ட அமர்வில் பிரதமர் மோடி காணொலி மூலம் வௌியுறவுத்துறை அமைச்சர்களிடையே உரையாற்றினார். அப்போது, “உலகளாவிய நிதி நெருக்கடி, பருவநிலை மாற்றம், பெருந்தொற்றின் தாக்கம், உலகளாவிய பயங்கரவாதம், போர் உள்ளிட்டவை உலக நாடுகளை மிகவும் பாதித்துள்ளது. இவைகளை சமாளிப்பதில் சர்வதேச ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது என்பதையும், தோல்வியின் மோசமான பின்விளைவுகளை வளரும் நாடுகளே அதிகம் எதிர்கொள்கின்றன என்பதையும் நாம் ஒத்து கொள்ள வேண்டும்.

பல வருட முன்னேற்றங்களுக்கு பின்னர், நீடித்த வளர்ச்சியின் இலக்குகளை அடைவதில் உலக நாடுகள் பின்னோக்கி செல்லும் அபாயத்தில் உள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வளரும் நாடுகள் தங்கள் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலும் வளரும் நாடுகளை பாதிக்கின்றன. இதனால்தான் ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்றுள்ள  இந்தியா உலகளாவிய தெற்குநாடுகளின் குரலாக ஒலிக்கிறது.

உலகளாவிய பதற்றங்கள், பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. தற்போது இந்த கூட்டத்தில் பங்கேற்காத மற்ற நாடுகளுக்காகவும் பொறுப்பேற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்னைகள் உருவாக நாம் அனுமதிக்க கூடாது. பாதிக்கப்படுபவர்களின் குரலை கேட்காத எந்த ஒருநாடும் உலக நாடுகளுக்கு தலைமை வகிக்கும் உரிமையை கோர முடியாது. அனைவரும் எது நம்மை பிரிக்கிறது என்பதில் கவனம் செலுத்தாமல், எது நம்மை ஒருங்கிணைக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படும்போது சமநிலையை அடைய முடியும். இன்றைய கூட்டம் வேறுபாடுகளை கடந்து உயர்வுக்கு வழி வகுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” இவ்வாறு கூறினார்.

* கூட்டறிக்கை இல்லை

ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யா, சீனா ஆதரவு நாடுகளுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் உள்ளதால் அதுகுறித்த கூட்டறிக்கையை வௌியிட முடியவில்லை. ஆனால், தீவிரவாத செயல்பாடுகளை ஜி20 வௌியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கண்டித்தது” இவ்வாறு கூறினார்.

Related Stories: