திருத்தணி கோட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்

திருத்தணி: திருத்தணி கோட்டத்துக்கு உட்பட்ட திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களில் விவசாயிகள் வளர்க்கும் பசு மற்றும் எருமை மாடுகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுக்க கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச், செப்டம்பர் மாதத்தில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி திருத்தணி கோட்டத்தில் நேற்று துவங்கியது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட குமாரகுப்பம், கீழ்முருக்கம்பட்டு காலனி, மத்துார் குமாரகுண்டா ஆகிய பகுதிகளில் கோமாரி தடுப்பூசி போடும் பணிகளை திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார். இதன்பிறகு உதவி இயக்குனர் தாமோதரன் கூறியதாவது: திருத்தணி கோட்டத்தில், 78908 பசுக்கள், 1642 எருமைகள் என மொத்தம் 80550 மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இந்த மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 15 மருத்துக் குழுவினர் கிராமங்களுக்கு நேரிடையாக சென்று தடுப்பூசி போடுவார்கள்.

இந்த பணியில் உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் ஈடுபடுவார்கள். கன்றுகள் இறப்பு, பால் உற்பத்தி குறைவது போன்றவையால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு விவசாயிகள் அனைவரும் தவறாமல் மாடுகளுக்கு நோய் தடுப்பூசி  போட்டுகொள்ளவேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர், செயலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: