கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் விவசாயிகளின் 'நீதி கேட்டு நெடும் பயணத்தை'தொடங்கி வைத்தார் துரை வைகோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றம் நோக்கி செல்லும் விவசாயிகளின் நீதி கேட்டு நெடும் பயணத்தை மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று 02.03.2023 கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அணி திரண்டு ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

விடுதலை இந்தியாவில் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தப் போராட்டத்தையொட்டி பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதைக் கண்டித்தும், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்கிறார்கள்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 விவசாய சங்கத் தலைவர்கள் கொண்ட குழு பி.ஆர்.பாண்டியன் அவர்களின் தலைமையில், ,இன்று மார்ச் 2 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி டெல்லி நாடாளுமன்றம் வரை மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாகனப் பயணம் செல்கிறார்கள். இப்பயணத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார்கள்.

Related Stories: