சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் ஷீபா வாசு மறைவுக்கு இரங்கல்: கூட்டம் ஒத்தி வைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், மறைந்த 122வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசு மறைவிற்கு, மேயர் பிரியா இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து திமுக கவுன்சிலர் மதிவாணன், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா, பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் கவுன்சிலர்கள் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினர். அப்போது கவுன்சிலர்கள், ‘‘பணிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்ததால் 2 லட்சம் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் மாமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் இல்லை.

இத்தகைய குடும்ப நலன் சார்ந்த சலுகைகளை வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். மேயர் பிரியா: கவுன்சிலர்கள் இயற்கை மரணம் எய்தினால் 1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, மறைந்த கவுன்சிலர் ஷீபா வாசுவின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும். துணை மேயர் மகேஷ்குமார்: பணிகாலத்தில் மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்தினருக்கு 1 லட்சம் வழங்கப்படுவதாக மேயர் கூறினார். இந்த தொகையை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். மேயர் பிரியா: இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பின்னர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு 2ம் தேதி மீண்டும் மாநகராட்சி மன்ற கூட்டம் கூடும்’ என மேயர் பிரியா தெரிவித்தார்.

* முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர்,  மாநகராட்சி கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ‘‘அடுத்த கூட்டம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்’’ என்றார். அதன்படி, நேற்று மாநகராட்சி மாமன்ற கூட்டம்  தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. நூற்றாண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சி கூட்டம் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: