தமிழ்நாட்டு பெண்கள் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன்: மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பதவியேற்ற பின் குஷ்பு பேட்டி.!

டெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிரபல நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தொடக்கத்தில் இவர் திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்த குஷ்பூ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னரும் கட்சியில் தீவிர பணியாற்றி வரும் அவருக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பூவுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நடிகை குஷ்பூ நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு இதுகுறித்து பேட்டி அளித்த கூறியதாவது; பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உலகளவில் இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் உள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, தன்னால் முடிந்ததை செய்வேன் என உறுதி அளித்த அவர், தமிழ்நாட்டு பெண்களின் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தார்.

Related Stories: