தேசிய நலன் கொண்ட அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அக்னிபாத் திட்டம் என்பது தேசிய நலன் கொண்டது என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், அதுதொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அக்னிபாத்  திட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி உத்தரவிட்டது.  இதையடுத்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் உட்பட மாற்றம் செய்யப்பட்ட மொத்தம் 23மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் 25ம் தேதி  நடைபெற்றது.

அப்போது இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து மனுவை விசாரிக்க வேண்டும் என மனுதார்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 15ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,‘‘அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான எந்த ஒரு காரணத்தையோ அல்லது முகாந்திரத்தையோ கண்டறிய இயலவில்லை. இது தேசிய நலம் சார்ந்த திட்டம். அதன் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதனால் அக்னிபாத் திட்டத்திற்கு தடையோ அல்லது அதற்கு எதிராகவோ எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தீர்ப்பளித்த நீதிபதிகள், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: