காஞ்சிபுரத்தில் அரிசி ஆலை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்படும் நவீன அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாம்பல் துகள்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் நகரத்தை ஒட்டிய புத்தேரி, வெள்ளகுளம், கீழம்பி, அரக்கோணம் சாலை, பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு, தொடர்ந்து இயங்கும் இந்த நவீன அரிசி ஆலைகளில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புகைபோக்கிகளில் சல்லடை பொருத்தப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரிசி ஆலைகளில் நெல் ஊறல் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுநீர் சாலைகள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் இரவு நேரங்களில் திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், சாலைகளில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நவீன அரிசி ஆலைகளில் புகைப்போக்கிகளில் சல்லடைகள் போடப்பட்டு அதில் கரி துகள்கள் வடிகட்டப்பட்ட பிறகே புகை வெளியேற்றப்பட வேண்டும். இந்த சல்லடை வழியாக தேங்கும் கரித்துகள்கள் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.

இந்த கரித்துகள்களை விவசாய நிலங்களுக்கு உரத்துக்கு பதிலாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால், பல அரிசி ஆலைகளில் இந்த ஏற்பாடுகள் செய்யப்படாமல் காற்றில் பறந்து வருகின்றன. இது சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் விழுகின்றன. இந்த கரி துகள்கள் கண்களில் விழும்போது கண்களை கசக்கினால் கண்களை அறுக்கும் தன்மை கொண்டவை. இதனால், பெரும் பாதிப்புகள் உருவாகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: தொடர்ந்து இயங்கும் அரிசி ஆலைகளில் இருந்து ஊறல் தண்ணீர் இரவு நேரங்களில் வெளியேற்றப்படுகிறது. இது அருகில் உள்ள வயல்வெளி பகுதிகளில் தேங்கி நிற்பதுடன், துர்நாற்றம் அடிக்கிறது. இதனால், இங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக அடிக்கடி குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், கரிதுகள்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துவைத்து காய வைக்கப்படும் துணிகள் ஆகியவற்றின் மீது படிகின்றன.

எனவே, இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வுகளை நடத்தி, முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புகைபோக்கிகளில் சல்லடை பொருத்துதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்துவதுடன் தொடர்ந்து விதிகளை பின்பற்றாத நவீன அரிசி ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: