திருமூர்த்தி அணையின் கரையோரம் காய்ந்திருக்கும் புற்களால் தீ விபத்து அபாயம்

உடுமலை : திருமூர்த்தி அணையின் கரையோரம் வளர்ந்து தற்போது காய்ந்திருக்கும் புற்களால் தீ விபத்து அபாயம் நீடிக்கிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 44.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1138 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 833 கனஅடி தண்ணீர் கான்டூர் கால்வாய் வழியாக வந்து கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையின்றி வனங்கள் காய்ந்து வருகின்றன. இதே போல அணையின் கரையோரம் உள்ள பகுதிகளில் பருவமழையின் போது வளர்ந்திருந்த புற்கள் பசுமையாக காட்சிஅளித்தன.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரேனும் பீடி,சிகெட்டை குடித்து விட்டு வீசி விட்டால் அணையின் கரையோரம் சுமார் 3 கி.மீ தொலைவிற்கு வளர்ந்துள்ள புற்கள் அனைத்தும் தீப்பற்றி எரிய துவங்கும். இதனால் புல்,புதர்களில் வசிக்கின்ற அணில், முயல்,ஓணான்,தவளை உள்ளிட்ட சிற்றுயிர்கள் அனைத்தும் தீயில் எரிந்து உயிரிழக்கும்.

மேலும் காட்டுத் தீ போல பரவும் தீயால் அணையின் கரையோரம் உள்ள செடி,கொடி,மரங்களும் தீயில் நாசமாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர்,வனத்துறையினர் ஒன்றிணைந்து காய்ந்த புற்களை வெட்டி அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே நாளில் 17 தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று 17 தீ விபத்துகள் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் காய்ந்த புல்களில் தீ பற்றிய அழைப்புகள் ஆகும். திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய பகுதிகளில் மட்டும் 5 தீ விபத்துகள் நடைபெற்றுள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் காட்டுப்பகுதியில் புல்கள் காய்ந்து உள்ளன. வழிப்போக்கர்கள் பீடி, சிகரெட் தீயை அணைக்காமல் வீசி செல்லும்போது புல்களில் தீப்பற்றி காட்டுப் பகுதியில் அதிகம் எரிகிறது. கடந்த ஒரு வாரமாக காட்டுப் புல்லில் பற்றிய தீயை அணைக்கும் பணிக்காகவே தீயணைப்பு வாகனங்கள் அதிகம் சென்று வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Related Stories: