ரத்தினகிரியில் கிருத்திகையை முன்னிட்டு அறுகோண தெப்பக்குளத்தில் பொதுமக்களே ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி

ஆற்காடு :  ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் கிருத்திகையை முன்னிட்டு பொதுமக்களே ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் புதிதாக அறுகோண தெப்பக்குளம் அதிக பொருட் செலவில் கட்டப்பட்டு கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தெப்பக்குளம் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அந்த நேரங்களில் பக்தர்களுக்காக திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், தேவாரம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம், ரத்தினகிரி அந்தாதி மற்றும் பக்தி பாடல்களும், கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவும் ஒலி, ஒளி அமைப்பின் மூலம் ஒளிபரப்பப்படும். பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று வேள்வி பூஜை செய்து பக்தர்களே தங்கள் கையால் ஆரத்தி செய்யலாம்.

மேலும், ஆழமானதாகவும் 11 அடி தண்ணீர் உள்ளதால் தெப்பக்குளத்தில் யாரும் இறங்க கூடாது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தெப்பக்குளம் திறக்கப்பட்ட பிறகு நேற்று முதல் கிருத்திகை  என்பதால் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை செய்து ஆரத்தி காட்டி அரோகரா முழக்கமிட்டு வணங்கினார்கள்.

Related Stories: