பரிட்சை அட்டை, தண்ணீர் பாட்டிலுடன் பிளஸ் 2 தேர்வுக்கு வந்த பாஜ மாஜி எம்எல்ஏ: உ.பி.யில் வினோத சம்பவம்

பரேலி: தனது 51வது வயதில் கையில் பரிட்சை அட்டை, தண்ணீர் பாட்டில் சகிதம் 12ம் வகுப்பு தேர்வு எழுத வந்த பாஜ முன்னாள் எம்எல்ஏ.வை மாணவர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து சென்றனர். உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பித்ரி சைன்பூர் தொகுதியில் பாஜ சார்பில் கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ. ஆனவர் பப்பு பர்தாவுல் என்ற ராஜேஷ் மிஸ்ரா. அண்மையில் உ.பியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது.  தேர்வு தொடங்கிய தினத்தன்று ராஜேஷ் மிஸ்ரா(51) கையில் பரிட்சை அட்டை, தண்ணீர் பாட்டில் சகிதம் ஹாலுக்கு வெளியில் காத்திருந்தார். தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவரும் வித்தியாசமாக நின்றிருந்த அவரை வியப்புடன் பார்த்து சென்றனர்.

இதைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளாத அவர், முதலில் தன்னை வினோதமாக பார்த்த மாணவர்கள் தங்களது முன்னாள் எம்எல்ஏ என்று அடையாளம் தெரிந்ததும் பரவசமாகி விட்டனர் என்று கூறினார். பின்னர் மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து அவர் தேர்வு எழுதினார்.  இவர் தனது தொகுதியில் உள்ள ஏழைகளுக்கு சட்ட ரீதியாக உதவ வழக்கறிஞராக வேண்டி விரும்பி, 12ம் வகுப்பு தேர்வு எழுத வந்திருப்பதாக தெரிவித்தார்.

Related Stories: