மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இணை ஆணையர் அறிவுரை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரியமிக்க தலசயன பெருமாள் கோயிலில் அனைத்து பணிகளும் பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வின்போது அறிவுரை வழங்கினார்.

  மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரியமிக்க ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக திகழ்ந்து வருகிறது.

இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 நாட்கள் பாலாலயம் செய்யப்பட்டு, மூலவர் கருவறை மற்றும் அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டது. பின்னர், பழமை மாறாமல் ஆகம முறைப்படி திருப்பணிகளை மேற்கொண்டு கோயில் கும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ₹65 லட்சம் நிதியை இந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில், தலசயன பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகளை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, இக்கோயிலில் பழைய மின் இணைப்புகள் அகற்றப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, புதிய மின் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் அமைத்து, முதல் கட்டமாக மூலவர், உற்சவர், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார், ஸ்ரீதேவி-பூதேவி, ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளை ஆகம முறைப்படி பழமை மாறாமல் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோயில் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.  

மேலும், இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் தலசயன பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி, ஆண்டாள், நிலமங்கைதாயார், ஆஞ்சநேயர், பூதத்தாழ்வார், சீதை, ராமர் ஆகிய உற்சவ மூர்திதகளின் வெண்கல சிலைகளை வைப்பதற்கு பாதுகாப்பு அறைகளை உடனடியாக சீரமைக்க இணை ஆணையர் வான்மதி உத்தரவிட்டார்.

 

முன்னதாக, மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 4ம் தேதி நடத்துவதாக நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து திருப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கோயில் அதிகாரிகளிடம் இணை ஆணையர் வான்மதி அறிவுறுத்தினார். மேலும், கோயில் திருப்பணிகள் தொடர்பாக அர்ச்சகர்களிடம் ஆலோசனை கேட்டார்.

இந்த ஆய்வில், செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் சரவணன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், கோயில் மேலாளர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: