ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் எம்ஜிஆரின் கொள்கை செத்து விட்டதா?.. எடப்பாடிக்கு கவிஞர் காசி முத்து மாணிக்கம் கேள்வி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம், எம்ஜிஆரின் கொள்கையும் செத்து விட்டதா என்று எடப்பாடி பழனிசாமிக்கு, கவிஞர் காசி முத்து மாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக வர்த்தகர் அணி சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமைதாங்கினார். இதில், இணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்எல்ஏ, முத்துச்செல்வி, துணை தலைவர் மற்றும் துணை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1ம்தேதி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க செயின், தங்க மோதிரம் வழங்கியும், ஆதரவற்றோர் முதியார்களுக்கு உணவு வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து வர்த்தகர் அணி சார்பில் அனைத்து வியாபாரிகளையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக பெயர் பலகைகளில் செம்மொழியான நமது தமிழ்மொழி கட்டாயமாக இடம் பெற வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலைஞர் தனது நிதிநிலை அறிக்கை வெளியிடும் போது, வணிகர்களையும், விவசாயிகளையும் அழைத்து பேசி அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை சமர்பிப்பது வழக்கம். அந்த நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியில் முற்றிலும் கைவிடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதால், வணிகர்களையும் விவசாயிகளையும் அழைத்து பேசி தான் வரும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில், கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேசியதாவது:

 இரண்டு ஆண்டுகள் கூட நிறைவு இல்லாத சட்டமன்ற உறுப்பினர் இறந்ததால் ஏற்கனவே வெற்றி பெற்ற கட்சிக்கே கொடுப்பது தான் நியாயம். அதனால், காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தட்டும், நாங்கள் ஒதுங்கி கொள்வது தான் தர்மம் என்றார் எம்ஜிஆர். இது தான் எம்ஜிஆர் கொள்கை. காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரசாரமும் செய்தார். ஆனால், திருமகன் இன்று சட்டமன்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத சூழலில் இறந்ததால், அவரின் காங்கிரஸ் கட்சிக்குத் தானே விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

 மாறாக அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் அதிமுகவில் எம்ஜிஆரின் கொள்கை செத்து விட்டதா. எம்ஜிஆரின் அதிமுக இப்போது இல்லையா. ஈவிகேஎஸ்.இளங்கோவனை பொறுத்தவரை அவர் ஒன்றிய கேபினட் அமைச்சராக வேண்டியவர். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிற்கிறார். தொலை தூரம் நடந்து சென்று முடிக்க வேண்டிய வேலையை தொலை பேசிலேயே முடிப்பார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். இங்கே குட்டி 8 அடி பாய்ந்திருந்தது. தாயின் 16 அடி பாய்ச்சலை இனி பார்க்கப் போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: