இறுதி கட்டத்தில் அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் வழக்கு: கோவை, சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி முகாம்

சேலம்: அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கோவை, சேலத்தில் முகாமிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. இவரது நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருக்கிறார். இவர் அதிமுகவின் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அசைக்க முடியாத நபராக திகழ்ந்து வந்தார்.

இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சில மாதங்களுக்கு முன்பு அவரது வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடு என மொத்தம் 36 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 41 கிலோ தங்க நகை, 280 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.34.28 லட்சம் பணம், ரூ.70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் ரூ.5.5 லட்சம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டிற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் வேலுமணி. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டின்பேரில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஜி மின்துறை அமைச்சரான தங்கமணி மீதும் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஜிபி கந்தசாமி கோவை மற்றும் சேலத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று கோவை வந்த அவர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நேற்று மாலை சேலம் வந்தார். அவர் அதிகாரிகளை வரவழைத்து ஊழல் வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வர ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக விசாரித்து வருகிறோம். தற்போது வழக்குகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக உயர்அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்’ என்றனர்.

Related Stories: