புதுடெல்லி: டெல்லி ஆம்ஆத்மி கவுன்சிலர் ஒருவர், திடீரென இன்று பாஜகவில் சேர்ந்தார். டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், நிலைக்குழு உறுப்பினர் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆம்ஆத்மி - பாஜக கவுன்சிலர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனால் மாநகராட்சி கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் செஹ்ராவத், இன்று திடீரென டெல்லி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நிலைக்குழு தேர்தலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பவன் செஹ்ராவத் கூறுகையில், ‘டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் அமளியை ஏற்படுத்த வேண்டும் என்று எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால் அக்கட்சியில் இருந்து விலகினேன்’ என்றார்.