ரோச் பூங்காவுக்குள் தண்ணீர் புகுந்தது: தூத்துக்குடியில் திடீர் கடல் பெருக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீர் கடல் பெருக்கம் காரணமாக ரோச்பூங்காவிற்குள் கடல் நீர் புகுந்தது. தூத்துக்குடி பகுதி மன்னார் வளைகுடா கடல் பெரும்பாலும் அமைதியாகவே காணப்படும். அமாவாசை அல்லது பவுர்ணமி தினங்களில் மட்டும் கடல் சீற்றம் அல்லது கடல் உள்வாங்குதல் நடப்பது வழக்கம். தற்போது அமாவாசை முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் தூத்துக்குடியில் தெற்கு பீச்ரோடு பகுதியில் கடல் பெருக்கு வழக்கத்தை விடவும் அதிகமாக காணப்பட்டது.

மேலும் இதனால் கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுமரங்கள், நாட்டுப்படகுகள், வள்ளங்கள் தண்ணீரில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டன. இனிகோநகர் பகுதியில் மீன் இறங்குதளம் வரையில் கடல் நீர் ஏறியுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதியான ரோச் பூங்காவினுள் சுமார் 100 அடி தொலைவிற்கு கடல் நீர் புகுந்தது. இதில் பூங்காவினுள் இருந்த சிறுவர் விளையாட்டு உபகரணங்களை நீர் சூழ்ந்தது.

கழிமுகத்துவார பகுதிகளிலும் கடல் நீர் பெருக்கெடுத்து ஏறியது. அங்கு பொதுமக்கள் கடலுக்குள் நடந்து சென்று பார்க்க வசதியாக அமைக்கப்பட்டிருந்த மண்ணால் ஆன நடைமேடையின் பெரும்பகுதி மூழ்கியது. மேலும் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக பச்சை நிறத்திற்கு மாறிய நிலையில் அலைகள் மிகுந்த உயரத்திற்கு எழுந்தது. மாலையில் வழக்கம்போல கடல் இயல்புநிலைக்கு திரும்பியது.

Related Stories: