நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை

நெல்லை:  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட    புனித நாட்களை நினைவுகூரும் வகையில்  உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் 40    நாட்கள் தவக்காலம் மேற்கொண்டு சிறப்பு  வழிபாடு நடத்துவர். இந்த   தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதையொட்டி பாளை. தூய சவேரியார்  பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நேற்று காலையில் சாம்பல் புதன்  சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 6 மணிக்கு மறை மாவட்ட  ஆயர் அந்தோணிசாமி  கிறிஸ்தவ மக்களின்  நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு  குருத்தோ லை ஞாயிறு அன்று எரிக்கப்பட்ட குருத்தோலை சாம்பலை  நெற்றியில் பூசி  சாம்பல் புதனாக இந்த தவக்காலத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு  திருப்பலியில் பங்குத்தந்தை சந்தியாகு, உதவி பங்குத் தந்தையர்கள் செல்வின்,  இனிகோ, ஆயரின் செயலர் மைக்கேல் பிரகாசம் மற்றும் பாளை. சுற்று வட்டார  பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி சின்னக்கோவில் திருஇருதய பேராலயத்தில் நேற்று காலை பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.கடந்த குருத்தோலை பண்டிகைக்கு பயன்படுத்திய குருத்தோலைகள் எரிக்கப்பட்டு அதன் சாம்பலை கொண்டு பங்கு மக்கள் நெற்றியில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி, சிலுவை வரைந்து ஆசி கூறினார். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதேபோல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையுடன் தவக்காலம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 40  நாட்கள் வரையிலான தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து  விரதம்  மேற்கொள்வர். மேலும் தவக்காலங்களில் சிலுவைபாடுகள் குறித்த  தியானங்கள் மற்றும்  சிலுவை பயணங்களை மேற்கொள்வர். ஏப்ரல் மாதம் 7ம்தேதி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துக்க தினமான  புனித வெள்ளி  அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 9ம்தேதி  ஞாயிற்றுக்கிழமை இயேசு  கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக  உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

Related Stories: