முதுகுளத்தூரில் விரைவில் அமைகிறது; ரூ.2 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை

சாயல்குடி: முதுகுளத்தூர் பேரூராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்துள்ளார். முதுகுளத்தூர் பேரூராட்சி, சட்டமன்ற தொகுதி, தாலுகா மற்றும் யூனியன் தலைமையிடமாக உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 6,500 முதல் 7 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த பேரூராட்சியில் டீக்கடை, உணவங்கள், காய்கறி, பலசரக்கு, மெடிக்கல் உள்ளிட்ட அத்தியாவசியவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அனைத்து விதமான கடைகள் மற்றும் அரசு அலுவலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, மருத்துவமணை, நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், கோயில், மசூதி, தேவாலயம் என பொதுமக்கள் தொடர்புடைய அனைத்தும் உள்ளன.

இதனால் உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்காக கிராமங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் நாள்தோறும் முதுகுளத்தூர் வந்து செல்கின்றனர். மேலும் அருகிலுள்ள கமுதி, கடலாடி தாலுகாவை சேர்ந்த பல்வேறு கிராமத்தினரும் போக்குவரத்து உள்ளிட்ட முக்கியமான காணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நகரமாக இது உள்ளது. இங்கு வீடு, கடைகள், நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக கடலாடி, தேரிருவேலி செல்லும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் துர்நாற்றம் வீசி வருகிறது. இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதுகுளத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய அமைச்சருமாமன ராஜகண்ணப்பன்  ஏற்பாட்டின் பேரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்காக முதுகுளத்தூருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இரண்டு பகுதிகளில் முதற்கட்டமாக பொருத்தமான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி செய்யப்பட்டு தேர்வாகும் ஒரு இடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவாகி உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாக அனுமதி கிடைத்ததும் முதற்கட்ட பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி முதுகுளத்தூர் மக்களின் நீண்டநாள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்க இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து முதுகுளத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் கூறும்போது, இந்தகரில் உள்ள கட்டிடங்களின் அடிப்படையில் எப்போதோ கழிவுநீர் சுத்திரிகரிப்பு நிலையம் உருவாகி இருக்க வேண்டும். இதற்கிடையே தற்போது நகரில் கட்டிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவும் உயர்கிறது.

இதனை சுத்திரிக்காமல் இருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் சுத்திரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்றுவதாக கடந்த தேர்தலின்போது திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதன்படி தற்போது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட திமுக அரசை வெகுவாக பாராட்ட வேண்டும் என்றார்.

Related Stories: