தோகைமலை அருகே கழுகூரில் போக்குவரத்திற்கு இடையூறான சீமைகருவேல மரங்கள் அகற்றம்-குடியிருப்போர் நலச்சங்கம் நடவடிக்கை

தோகைமலை : தோகைமலை அருகே கழுகூரில் பொதுஇடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி கழுகூரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் நட்டு குடியிருப்போர்களால் பராமரிக்கச் செய்வது, அனைத்து குழந்தைகளும் கல்வி பயின்று வீட்டுக்கு ஒரு விஞ்ஞானியாக உருவாக்குவது, அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவது, கழுகூரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள பணியாற்றுவது போன்ற பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கழுகூர் பகுதிகளில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.இதனை அடுத்து கழுகூர் பகுதிகளில் உள்ள தெருக்கல், மெயின் ரோடு, கோயில்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் குழாய்கள், பள்ளிகள், அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய பகுதிகளில் இடையூறாக சூழ்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். மேலும் சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

இதேபோல் மாணவ, மாணவிகள் மத்தியில் இயற்கை சுற்றுச்சூழல்களில் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதன் முக்கிய பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு கழுகூர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில் கழுகூர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: