திருவையாறு அருகே மணல் லாரி, லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம்-பொதுமக்கள் சாலைமறியல்

திருவையாறு : திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டை கடையதோப்பு மெயின்ரோட்டில் மணல் லாரியும், லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து நேற்று காலை மருவூர் மணல் குவாரிக்கு லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரை சேர்ந்த பாண்டிசெல்வி (35), மகாலட்சுமி (55), வீரநாக ஜான்ஸி (26), காயத்ரி (14), பாலமுருகன் (34), சேசு (60), கோகுல் (26) உள்ளிட்ட 7 பேர் ஒரு லோடு ஆட்டோவில் குலதெய்வகோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி வந்து கொண்டிருந்தனர். கடையதோப்பு மெயின்ரோட்டில் வரும்போது எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டது. இதில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் படுகாயமடைந்து உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் தணிகாசலம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவையாறு தாசில்தார் பழனியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலைமறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: