மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் ஓலா, உபர் பைக்குகளுக்கு தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் லைசென்ஸ் ரத்து

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு  ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் இருசக்கர வாகனங்கள் இயக்குவதற்கு அம்மாநில அரசு அனுமதியளிக்க மறுத்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமும் தடையை நீக்க மறுத்தது. இந்த நிலையில் டெல்லியில் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறை  அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘மாநில அரசின் முறையான அனுமதி இல்லாமல் வணிக நோக்கங்களுக்காக இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது என்பது மோட்டார் வாகனச் சட்டம் - 1988 க்கு எதிரானது. இதனால் தலைநகரில் அத்தகைய இருசக்கர வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி  அரசின் உத்தரவை மீறி முதல் தடவை இயக்கப்படும் வாகனங்களுக்கு 5,000 ரூபாயும், 2 முறையாக இயக்கினால் ரூ. 10,000 அபராதம் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

Related Stories: