பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம்: திருப்பதியில் வரும் 1ம் தேதி அமல்

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வருகிற 1ம்தேதி முதல் சோதனை முறையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ெவளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட், லட்டு பிரசாதம், அறை ஒதுக்கீடு, அறைகளை காலி செய்து முன்பணத்தை திரும்ப பெறுதல் போன்றவற்றில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வருகிற மார்ச் 1ம் தேதி   முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளது. தனி நபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதை தவிர்க்கவும், இலவச தரிசன கவுன்டரில் அறை ஒதுக்கீடு  ஆகியவற்றில்  இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதனால், இடைத்தரகர்கள் முறைகேடு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும். சோதனை முறையில் கொண்டு வரப்படும் இத்திட்டத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் கண்டறியப்படும்.

* 6 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள ஒரு அறை மட்டுமே பக்தர்களால் நிரம்பியது. இதனால், பக்தர்கள் 6 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: