கன்னிகைப்பேர் பெரியகுளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு பின்புறம் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய குளம் உள்ளது. இது கன்னிகைப்பேர்  மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது இந்த குளத்தை சீரமைக்காததால் செடி, கொடிகள் மற்றும் நாணல் புற்கள் வளர்ந்து ஆக்கிரமித்துவிட்டது. மேலும் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் கால்வாய்கள் தூர்ந்துவிட்டதால் தண்ணீர்வருவது தடைப்பட்டு குளம் வறண்டு காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந் வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசுபட்டு அசுத்தமாகிவிட்டது.

இது மட்டுமல்லாது கோழி, மீன், இறைச்சி கழிவுகளை கொண்டுவந்து கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைத்து சுற்றி நடைப்பாதை பூங்கா அமைத்து தர வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட துறைக்கு மனு கொடுத்தும் கிராம சபை கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கோடை காலத்துக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: