பராமரிப்பு பணிகள் தீவிரம் அகஸ்தியர் அருவி சுற்றுலா செல்ல பொதுமக்களுக்கு தடை நீட்டிப்பு-பிப்.22 முதல் சொரிமுத்து அய்யனார் கோயில், சேர்வலாறு செல்ல அனுமதி

விகேபுரம் : பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை மறுநாள் (பிப்.22) முதல் சொரிமுத்து அய்யனார் கோயில், சேர்வலாறு செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் ஆண்டு தோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்தாண்டு அம்பை கோட்டத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய நான்கு வனச்சரகங்களில் கடந்த 8ம் தேதி முதல் பிப்.21ம் தேதி வரை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதன்காரணமாக அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், சேர்வலாறு ஆகிய பகுதிகளில் நாளை வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி முடியும் தருவாயில் உள்ளதால் நாளை மறுநாள் முதல் சொரிமுத்தாறு அய்யனார் கோயில், சேர்வலாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கபடுகின்றனர். அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்தார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் ஆண், பெண்கள் தனித்தனியாக குளிக்க அருவியில் தடுப்பு அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தடுப்பு சுவர் முற்றிலும் சிதிலமடைந்ததால், தற்போதைய சூழலை பயன்படுத்தி கொண்டு தடுப்புச் சுவர் புதுப்பிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அருவியில் நீர்வரத்தால் சிமெண்ட் தளங்கள் பெயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் குளிக்கும் போது ஜல்லி கற்கள் காலை பதம் பார்ப்பதாக புகார் வந்தது. எனவே, சிமெண்ட் தளத்தை புதுப்பிக்கும் பணியும் நடை

பெறுகிறது’ என்றார்.

பராமரிப்பு பணியால் திருப்பி விடப்பட்டுள்ள அருவி

அகஸ்தியர் அருவியில் தற்போது பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக அருவி தண்ணீர் கொட்டுவதை தடுக்க மலை மேற்பரப்பில் தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டு, தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அருவி தண்ணீர் அருகில் உள்ள பாறை வழியாக வழிந்தோடுகிறது. தடுப்பு சுவர், சிமென்ட் தளம் அமைக்கும் பணி முடிவடைந்த பிறகு மீண்டும் தடுப்பு அகற்றப்பட்டு வழக்கம் போல் அருவியில் தண்ணீர் கொட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உருக்குலைந்த சாலை சீரமைக்கப்படுமா?

பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல அரைகிலோ மீட்டர் தூரமுள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் உருக்குலைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றன. குண்டும் குழியில் விழுந்து இருபுறமும் அசைந்தாடிய படி செல்லும் போது சுற்றுலா பயணிகள் ஒருவித அச்ச உணர்வுடன் பயணிக்கின்றனர். தற்போது அருவியில் பராமரிப்பு பணி நடைபெறும் சூழலை பயன்படுத்தி ெகாண்டு உருக்குலைந்த சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: