சீரமைப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியது: திருச்சி காவிரி பாலம் விரைவில் திறப்பு

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே காவிரி பாலம் உள்ளது. திருச்சி- ரங்கத்தை இணைக்கும் இந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் கனரக வாகனங்கள் கடந்து செல்லும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமானது. எனவே காவிரி பாலத்தை விரைந்து சீரமைக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் காவிரி பாலத்தை சீரமைக்க ரூ.6.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் பராமரிப்பு பணிகள் துவங்கியது. இதன் எதிரொலியாக காவிரி பாலத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் நீங்கலாக அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நவம்பர் 20ம் தேதி முதல் காவிரி பாலம் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

முதல்கட்ட பணியாக பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தூண்களில் பேரிங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது. இதைதொடர்ந்து தற்போது பாலத்தின் மேல் பகுதிகள் முழுமையாக சுரண்டி எடுக்கப்பட்டு புதிய சாலை போடுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. புதிய தார்ச்சாலை பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடையும். அடுத்தவார இறுதியில்(மார்ச் 1ம் தேதிக்குள்) காவிரி பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதனால் கடந்த 5 மாதமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் இன்னும் சில நாட்களில் நிம்மதி பெருமூச்சு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: