கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய யானை பத்திரமாக மீட்பு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய யானையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் ஒம்கர் வனசரகத்திற்கு உட்பட்ட தாஹி பகுதியில் இருந்து வெளியேறிய யானை, அங்குள்ள தனியார் தோட்டத்தில் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியதில் மயங்கி விழுந்தது. அதனை பார்த்த நில உரிமையாளர், மின்சாரத்தை துண்டித்ததுடன் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

அங்கு விரைந்த அவர்கள், யானையின் காலில் சுற்றிய மின் கம்பிகளை வெட்டி அகற்றினர். எனினும் அது எழுந்து நிற்க முடியாமல் தவித்ததால் ஜேசிபி உதவியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து உடல்நலம் தேறிய அந்த யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனிடையே தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, போடூர் கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை, விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.  

Related Stories: