கரூர் அருகே குளிக்க சென்ற 4 மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி பலி: விளையாட சென்ற இடத்தில் சோகம்

கிருஷ்ணராயபுரம்: கரூர் அருகே காவிரி ஆற்றில்  குளிக்க சென்ற, புதுக்கோட்டையை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் நீரில்  மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா இலுப்பூர் ஒன்றியம் பிலிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள், மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இதற்கான போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏளூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு நேற்றுமுன்தினம் மாலை ஆம்னிவேனில் 15 மாணவிகளை ஆசிரியர்கள் திலகவதி, ஜெபசகேவியு இப்ராஹிம் ஆகியோர் அழைத்து சென்றனர்.

நேற்று காலை நடந்த கால்பந்து போட்டியில் அந்த மாணவிகள் தோல்வி அடைந்தனர். இதையடுத்து மாணவிகன் அதே வேனில் புதுக்கோட்டை புறப்பட்டனர். மாயனூர் கதவணை பாலம் வழியாக வேன் சென்றபோது, அங்கு வேனை காவிரி ஆற்றில் குளித்து விட்டு போகலாம் என ஆசிரியர்களிடம் மாணவிகள் கேட்டுள்ளனர்.இதையடுத்து மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் படித்துறை பகுதியில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவு தூரம் மாணவிகள் சென்றனர். பகல் 12மணி அளவில் மாணவிகள் ஆற்றில் குளிக்க இறங்கினர்.

இதில் 12 மாணவிகள் சேர்ந்து முழங்கால் அளவு தண்ணீரில் குளித்துள்ளனர். அப்போது 2 அடி தூரம் தள்ளி சென்ற 8 மாணவிகள் திடீரென 11 ஆடி ஆழத்தில் சிக்கி தத்தளித்தனர். இவர்களில் பிலிப்பட்டியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி சோபியா (13), 8வது படிக்கும் தமிழரசி(14), 6வது படிக்கும் இனியா (12), லாவன்யா (12) ஆகிய 4 பேர் நீரில் மூழ்கினர். மற்ற 5 பேரும் மீட்கப்பட்டனர். தகவலறிந்து கரூர் தீயணப்பு மீட்புபடை வீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி 4 மாணவிகளின் சடலங்கை மீட்டு பரிசல்கள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கலெக்டர் பிரபுசங்கர் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதியில்லாமல் குளித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று தெரிவித்தார். மாணவிகளின் தாய்கள் மயக்கம்: கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த மாணவிகளின் தாய்கள் இருவர் அடுத்தடுத்து மயங்கினர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

*3 பேரை காப்பாற்றிய மாணவி

மாயனூர் ஆற்றில் 12 மாணவிகள் குளித்த போது, 8 மாணவிகள் 2 அடி தூரம் உள்ளே சென்றுள்ளனர். இதனால் திடீரென 11 அடி ஆழத்தில் சிக்கி தவித்தனர். அப்போது நீச்சல் தெரிந்த கீர்த்தனா (13) என்ற 7ம் வகுப்பு மாணவி மனம் தளராமல் நீச்சல் அடித்து 3 மாணவிகளை காப்பாற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

* தலா ரூ.2 லட்சம்  நிதியுதவி: முதல்வர் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

* தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பெட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகேவியு இப்ராஹீம், பட்டாதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.

Related Stories: