வேலூர் கோட்டைவெளி பூங்காவில் நுழைய ஆபத்தை உணராமல் கம்பிவேலியை தாண்டும் இளம்பெண்கள்

*தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வேலூர் : வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வேலூர் கோட்டையை சுற்றி அமைந்துள்ள பூங்கா மற்றும் காலியிடங்களில் சமூக விரோதிகள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காகவும், அகழியில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தொல்லியல் துறையினர் ஏற்கனவே உள்ள கம்பி வேலியை இருமடங்கு உயரமாக்கி அமைத்து வருகின்றனர்.

இதில் கோட்டைவெளி பூங்கா தொடங்கி மக்கான் சந்திப்பு வரை கம்பி வேலி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், அதை தாண்டி சமூக விரோதிகள் நுழைந்து தீ வைப்பு உட்பட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் நாளை பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தொடங்கி வரும் 14ம் தேதி வரை காதல் ஜோடிகள் பூங்காவில் நுழைந்து அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பூங்காவை தொல்லியல்துறை மூடி வைத்துள்ளது.

ஆனாலும் நேற்று காலை தொடங்கி மாலை வரை பூங்காவுக்குள் உயரமான கம்பி வேலியை தாண்டி இளம்பெண்களும், வாலிபர்களும் தாண்டி பூங்காவுக்குள் சென்று கொண்டிருந்தனர். இவ்வாறு ஏறிச் செல்லும்போது தவறி கம்பியிேலயே சரிந்தால் கம்பியின் நடுவில் வேல்போன்ற அமைப்பில் உள்ள கம்பி குத்தி உடலை கிழிக்கும் அபாயமும், தவறினால் அகழியில் விழும் அபாயமும் உள்ளதை அறிந்தே இதுபோன்ற சம்பவங்களில் இளம்பெண்களும், வாலிபர்களும் ஈடுபட்டதை பார்த்த பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

எனவே, கோட்டை பூங்காவிலும், கோட்டையை சுற்றியுள்ள கம்பிவேலியை தாண்டி செல்லும் செயல்களை தடுக்க கூடுதல் பணியாளர்களை நியமித்து தொல்லியல்துறை கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அல்லது காவல்துறை மூலம் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: