பெரியமேடு பகுதியில் போதைப்பொருட்கள் விற்ற வாலிபர் கைது

சென்னை: பெரியமேடு பகுதியில் மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர். சென்னை பெரியமேடு சூளை சைடாம்ஸ் பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சூளை சைடாம்ஸ் கண்மணி பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிவேகமாக பைக்கில் வந்த 2 பேரை போலீசார் வழிமறித்த போது, பைக்கில் வந்த 2 பேரில் ஒருவன், போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டான்.

பைக்கை ஓட்டி வந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை ஆய்வு செய்த போது, அதில், 3 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 1.1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், அவனிடம் விசாரணை நடத்திய போது, வியாசர்பாடி முல்லை நகரை சேர்ந்த முத்துகுமரன் (23) என்பதும், வடசென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் முத்துகுமரனை கைது செய்தனர். அவனிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: