நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்: ஜிஎஸ்டி இழப்பீடு பெற தாமதம் ஏற்படுவது ஏன்?

புதுடெல்லி: மாநில கணக்காயரின் அங்கீகார சான்றிதழ் கிடைக்காததால், சில மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை தொடர்பாக கேரள எம்பி பிரேமசந்திரன் மக்களவையில் எழுப்பிய துணை கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆண்டு மே 31ம் தேதி வரை செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டிற்கான ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஜிஎஸ்டி இழப்பீட்டை யாருக்க வழங்க வேண்டும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்கிறதே தவிர, ஒன்றிய அரசு அல்ல. மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவிப்பதற்கு மாநில கணக்காயரின் அங்கீகார சான்றிதழ் தேவை என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் ஒப்புக் கொண்ட செயல்முறையாகும்.

எனவே, கணக்காயரின் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், அது கணக்காயருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான விவகாரம். அவர்கள்தான் அதை தீர்க்க வேண்டும். கணக்காயர் சான்றிதழ் இல்லாமல், குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி நான் செல்வது கடினம். கேரளாவை பொறுத்த வரையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே 2017-18, 2018-29, 2019-20, 2020-21ம் நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கான கணக்காயம் சான்றிதழை இன்னமும் வழங்கவில்லை. ஆனால், ஒன்றிய அரசு சரியான நேரத்தில் நிதியை விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில், 2017-18ம் ஆண்டிற்கான கணக்காயர் சான்றிதழ்பெறப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் ரூ.4,223 கோடிக்கான கணக்காயரின் சான்றிதழில் சில புள்ளிவிவரங்களில் சர்ச்சைகள் இருந்த போதிலும், நிதி விடுவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: