தாயை மிஞ்சிய பாச போராட்டம் கணவர் வீட்டுக்கு புறப்பட்ட மணமகளை விடாமல் கண்ணீர் சிந்திய செல்ல நாய்: நாகர்கோவிலில் நெகிழ்ச்சி சம்பவம்

நாகர்கோவில்: நன்றி விசுவாசத்துக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பது நாய்கள் மட்டுமே.  நாய்களின் எஜமான பாசத்தை அளவிட முடியாது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை துரத்தி அடித்த நாய்களும், எஜமானை காப்பாற்ற உயிர் துறந்த நாய்களும் உண்டு. இவற்றின் அன்பு சில நேரம் மனிதர்களை மிஞ்சி விடுகிறது. அந்த வகையில் நாகர்கோவிலில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், அந்த வீட்டு பெண் திருமணமாகி கணவர் விட்டுக்கு புறப்பட்ட போது தாய் பாசத்தை தோற்கடிக்கும் வகையில் தாவி, தாவி பாசம் காட்டிய நிகழ்வு அனைவரையும் நெகிழ செய்தது.

நாகர்கோவில் அருகே  சித்திரை திருமகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியா (21). பி.இ. பட்டதாரியான இவருக்கும், முக்கூடல் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் அசோக் (25) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன், நாகர்கோவில் முகிலன்விளையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி மணப்பெண் வீட்டில் நடந்தது. அதை தொடர்ந்து மணமகள் சுகப்பிரியா, கணவர் வீட்டுக்கு புறப்பட்டபோது பெற்றோர் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். வீட்டு வாசலுக்கு கணவருடன் மணப்பெண் வந்தபோது அவர்கள் வளர்த்து வரும் நாய், வாசலில் கட்டி போடப்பட்டு இருந்தது.

அந்த வீட்டில் இருந்து கணவர் வீட்டுக்கு எஜமானி செய்வதை உணர்ந்த அந்த நாய், சுகப்பிரியாவை பார்த்ததும், இரு கால்களையும் அவர் மீது வைத்து தாவி, தாவி ஓலமிட்டது. ஆறுதல் சொல்வது போல் நாயை முத்தமிட்டு சமாதானப்படுத்தி விட்டு அவர் செல்ல முயன்றார். ஆனால் அவரது சேலை முந்தானையை தாவி பற்றிக்கொண்டது. இதை பார்த்ததும் சுகப்பிரியா கண்ணீர் சிந்தினார். நாயின் பாசத்தை பார்த்து மற்றவர்களும் கண்ணீர் சிந்தினர். சுகப்பிரியா வெளியே சென்று விட்டு உள்ளே வந்ததும் தாவி பிடித்துக் கொள்ளும். தூரத்தில் வரும் போதே  உணர்ந்து கொண்டு குரைத்தவாறு ஓடி சென்று அவர் மீது தாவும். 2, 3 நாட்கள் வெளியூர் சென்று விட்டால் அவரை தேடி அழும். அவரை பார்த்ததும் சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். தன்னை வளர்த்த பெண்ணின் பிரிவை தாங்க முடியாமல் அந்த நாய் நடத்திய பாசப்போராட்டம், அனைவரையுமே நெகிழ வைத்தது. இந்த காட்சிகள்  சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Stories: