ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம் முன்னாள் சாம்பியன்கள் கர்நாடகா - சவுராஷ்டிரா மோதல்

பெங்களூரு: ரஞ்சி கோப்பையில் முன்னாள் சாம்பியன்கள் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதும் முதல் அரையிறுதி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. நாடு முழவதும் 38 அணிகள் பங்கேற்ற ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று, காலிறுதி முடிவில்  சவுராஷ்டிரா, கர்நாடகா, பெங்கால், மத்திய பிரதேசம் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்களான கர்நாடகா - சவுராஷ்டிரா இடையிலான முதல் அரையிறுதி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது (5 நாள் போட்டி). இந்த 2 அணிகளும் ரஞ்சி கோப்பையை பல முறை வென்ற  முன்னாள் சாம்பயின்கள் தான்.

கர்நாடகா 8 முறையும், சவுராஷ்டிரா 3 முறையும்  ரஞ்சி கோப்பையை வசப்படுத்தி உள்ளன. நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும்  இதுவரை விளையாடிய  8 ஆட்டங்களில் கர்நாடகா 5 வெற்றி, 3  டிராவை சந்தித்துள்ளது. தோல்வி அடையவில்லை. சவுராஷ்டிரா 8  ஆட்டங்களில்  4 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. இந்த தொடரில்  சவுராஷ்டிராவை விட கா்நாடகாவின் கையே ஒங்கியிருந்தாலும்,  கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 3ல் சவுராஷ்டிரா தான்  வென்றுள்ளது.

எஞ்சிய 2 ஆட்டங்கள் டிராவாகி உள்ளன. இதில்  ஒரு ஆட்டம் நாக் அவுட் சுற்று ஆட்டம் என்பதால், அதிலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக சவுராஷ்டிராவே வென்றுள்ளது. அதனால் 4-0 என்ற கணக்கில்  முன்னிலையில் அந்த அணி  உள்ளது. அதே சமயம், உள்ளூரில் விளையாடுவது கர்நாடகா அணிக்கு சாதகமாக இருக்கும். உத்தரகாண்ட் அணியுடன் நடந்த காலிறுதியில் கர்நாடகா 606 ரன் குவித்து அசத்தியதுடன் இன்னிங்ஸ் மற்றும் 281 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதால், அந்த அணி வீரர்கள் கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரை சதம் விளாசிய நிலையில், ஷ்ரேயாஸ் கோபால் ஆட்டமிழக்காமல் 161 ரன் விளாசியதுடன் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் அணியுடன் நடந்த காலிறுதியில் கடுமையாகப் போராடி வென்ற சவுராஷ்டிரா அணியும் பைனலுக்கு முன்னேற வரிந்துகட்டுவதால், அரையிறுதியில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: