நவிமும்பை: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) தொடரின் முதல் போட்டியில் நேற்று, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளில் 5 அணிகள் மோதுகின்றன. இந்தாண்டில் டபிள்யுபிஎல் தொடரின் முதல் போட்டி நவிமும்பையில் நேற்று துவங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து மும்பை அணியின் துவக்க வீராங்கனைகளாக அமெலியா கெர், கமாலினி களமிறங்கினர்.
அமெலியா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் சிவர்பிரன்ட் 4, கமாலினி 28 பந்துகளில் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இணை சேர்ந்த நிகோலா கேரி, சஜீவன் சஜானா அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை 5வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. நிகோலா 29 பந்தில் 40, சஜானா 25 பந்தில் 45 ரன் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. பெங்களூரு தரப்பில் நாடின் டிகிளார்க் 4, லாரன் பெல், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
