மலேசியா ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் கால் பதித்த சிந்து

கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அட்டகாசமாக ஆடி ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை டொமோகா மியாஸாகி மோதினர்.

துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-8 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் அந்த செட்டையும், 21-13 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென்- ஹாங்காங் வீரர் லீ சியுக் யியு மோதினர். முதல் செட்டில் சென் ஈடு கொடுத்து ஆடியபோதும், அந்த செட்டை 22-20 என்ற புள்ளிக் கணக்கில் லீ சியுக் கைப்பற்றினார். அடுத்த செட்டில் சிறப்பாக ஆடிய லீ சியுக் 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

* சாத்விக்-சிராக் கலக்கல்
மலேசியா ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை, மலேசியாவை சேர்ந்த யாப் ராய் கிங், ஜுனைதி ஆரிப் இணையுடன் மோதியது. முதல் செட்டில் சிறிது போட்டி இருந்தபோதும் அந்த செட்டை 21-18 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய இணை கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த 2வது செட்டை 21-11 என்ற புள்ளிக்கணக்கில் சாத்விக், சிராக் இணை வசப்படுத்தியது. இதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Related Stories: