ஆனந்த்: விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி சிறப்பாக ஆடி 77 ரன் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தியது. விஜய் ஹசாரே கோப்பைக்காக குஜராத்தின் ஆனந்த் நகரில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு – கேரளா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஆதிஷ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரும் கேப்டனுமான ஜெகதீசன் அட்டகாசமாக ஆடி 126 பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 139 ரன்கள் விளாசினார்.
பின் வந்தோரில் ஆந்த்ரே சித்தார்த் 27, பூபதி வைஷ்ண குமார் 35 ரன் எடுத்தனர். 50 ஒவர் முடிவில் தமிழ்நாடு 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. கேரளா தரப்பில் ஈடன் ஆப்பிள் டாம் 46 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகளை பறித்தார். அதன் பின், 295 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கேரளா களமிறங்கியது. துவக்க வீரர் கிருஷ்ண பிரசாத் 14 ரன்னில் விக்கெட் இழந்து அதிர்ச்சி தந்தார்.
மற்றொரு துவக்க வீரரும் கேப்டனுமான ரோகன் குன்னும்மல் 45 பந்தில் 73 ரன் குவித்தார். பின் வந்த வீரர்களில் பாபா அபராஜித் 35, விஷ்ணு வினோத் 35, சல்மான் நிஸார் 25 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வீழ்ந்து நடையை கட்டினர். 40.2 ஓவரில் கேரளா 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், தமிழ்நாடு அணி, 77 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. தமிழ்நாடு தரப்பில் சச்சின் ரதி, முகம்மது அலி தலா 4 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
